பாளையங்கோட்டை அரசுப் பள்ளி வளாகத்தில் காலாவதியான துப்பாக்கியின் தோட்டா கண்டெடுக்கப்பட்ட விவகாரம்
குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தேர்தல் நேரங்களில் வாக்குச் சாவடி மையம் அமைக்கப்படுவது வழக்கம்.
அதன்படி, அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில், பள்ளி வளாகத்தை தயாா் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது, பள்ளி வளாகத்திலிருந்து தோட்டா ஒன்றை தூய்மைப் பணியாளா்கள் கண்டெடுத்துள்ளனர்.
அந்தத் தோட்டாவை, பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைத்துள்ளனா். பின்னர அது துப்பாக்கி தோட்டா என உறுதி செய்த தலைமையாசிரியர், அதை பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
அது காலாவதியான தோட்டா எனவும், தற்போதுள்ள நவீன ரக துப்பாக்கிகளில் அதை பயன்படுத்த முடியாது எனவும் கூறப்படும் நிலையில், பள்ளியில் தோட்டா கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.






