பாரதி பற்றி திமுகவை கூட்டம் போடச்சொல்லுங்கள். அதில் நான் பேசுகிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
ஆர்எஸ்எஸ். அமைப்பின் விஜில் என்ற பிரிவு நடத்திய விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு ‘பாரதி கண்ட வந்தே மாதரம்’ எனும் தலைப்பில் பேசினார். ஆர்எஸ்எஸ் நிகழ்வில் சீமான் கலந்து கொண்டது கடும் விமர்சனத்திற்குள்ளானது.
இந்த நிலையில், ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு சீமான் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,” ஆர்எஸ்எஸ் மற்றும் திமுக சமூக இயக்கங்கள் என்று சொன்னது நானா, அவர்களா? அது ஆர்எஸ்எஸ் இயக்கம் அது எல்லாம் கிடையாது. இலக்கிய அமைப்பு பாரதி பற்றி பேசு என்று சொன்னார்கள். நான் பாரதியை எங்கும் பேசுவேன். பாரதி இருக்கிற இடத்தில், பாரதி என்பது தமிழ். தமிழ் என்பது எனது தாய்.
தாய் இருக்கும் இடத்தில் மகன் இருப்பேன். அவ்வளவு தானே, நாளைக்கு திமுகவை பாரதி பற்றி கூட்டம் போட சொல்லுங்கள், நான் போய் பேசுகிறேன். 12 வருடம் திராவிட கழகம் மேடையில் பேசும் போது இனித்தது. ராஜ்நாத் சிங் உங்கள் தந்தையின் காசுவை வெளியிட்டார். பாஜவுக்கு 5 ஆண்டுகள் நிலையான ஆட்சியை கொடுத்து, இந்தியா முழுமைக்கும் தனது அதிகார கிளையை பரப்புவதற்கு உதவியாக இருந்தவர் கருணாநிதி என ராஜ்நாத் சிங் பேசியது வீடியோ இருக்கிறது போட்டு காட்டவா? இன்றைக்கு வேல்ஸ் திறப்பு விழாவில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்கும் போது உங்கள் அமைச்சர், உங்கள் ராஜ்யசபா எம்பி கமல்ஹாசன் பங்கேற்கிறார்களே இதற்கு கருத்து? எங்க போய் நிற்கிறேன் என்று பேசாதே, என்ன பேசினேன் என்று பேசுங்கள்” என்றார்.






