டி.டி.வி. தினகரனின் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் கடம்பூர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கடம்பூர் மாணிக்கராஜாவுடன் அமமுகவின் 3 மாவட்ட செயலாளர்களும் திமுகவில் இணைந்துக் கொண்டனர்.
யார் இந்த ‘இளைய ஜமீன்’..?
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்தவர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா. இவர் கடம்பூர் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்பகுதி மக்களால், “இளைய ஜமீன்தார்” என்று அழைக்கப்பட்டவர். அதிமுகவில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியின் செயலாளராக பணியாற்றி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் நன்மதிப்பை பெற்றவர்.
அதிமுக பிளவுப்பட்டு எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கமும், டிடிவி தினகரன் ஒரு பக்கமும் பிரிந்த போது மாணிக்கராஜா, டிடிவி தினகரன் பக்கம் சென்றார். அதன் பிறகு “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” (அமமுக) கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பேற்றுக் கொண்டு செயல்பட்டார்.

தினகரனின் வலதுகரம் :-
டிடிவி.தினகரனின் தென் மண்டலத் தளபதியாகத் திகழ்கிறார். சசிகலாவின் கணவர் நடராஜன் காலத்தில் இருந்தே அக்குடும்பத்துக்கு நெருக்கமானவர் மாணிக்கராஜா. தென் மண்டலத்தில் இவரது அனுமதியில்லாமல் கட்சியில் எந்த முடிவையும் டிடிவி. தினகரன் எடுத்ததில்லை. இந்த அளவுக்கு முக்கிய பிரமுகரான மாணிக்கராஜா அமமுகவில் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

அமமுக கட்சியில் இருந்து நீக்கம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் கடம்பூர் மாணிக்கராஜா கட்சியில் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். திமுகவில் இணைந்துள்ள மாணிக்கராஜாவின் செயலால் அதிருப்தி அடைந்த டிடிவி தினகரன் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மாணிக்கராஜா பேட்டி
திமுகவில் இணைந்த மாணிக்கராஜா செய்தியாளர்களிடம் பேசியதாவது, “பலமுறை எடுத்துச் சொல்லியும் கேட்காமல் தினகரன் எடுத்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.கவில் இணைந்துள்ளோம். என்னுடன் 3 மாவட்டச் செயலாளர்கள் இணைந்துள்ளனர். விரைவில் மற்றவர்கள் வருவார்கள். அ.ம.மு.க உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்துக்கு அர்த்தமில்லாத தலைமையின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியுள்ளோம்.” என்று கூறியுள்ளார்.






