அதிமுகவின் முக்கிய புள்ளிகள் விரைவில் தவெகவில் இணைவார்கள் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம், கரட்டூரில் உள்ள தவெக அலுவலகத்தில் வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவு தினம் இன்று(டிசம்பர் 25) கடைபிடிக்கப்பட்டது. இதன் பின் தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  “தமிழ்நாட்டில் ஆளும் இரு கட்சிகள் மட்டுமே ஆள வேண்டுமா, புதிய கட்சி ஆளக்கூடாதா? மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு தலைவர் விஜய் அறிவுரை வழங்கியுள்ளார். அதன்படி வாக்காளர் வரைவு பட்டியலை சரிபார்ப்பு பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். ஒபிஎஸ்சை பொறுத்தவரையிலும் அவருடன் உள்ள மாவட்ட செயலாளர் தவெகவுடன் செல்ல வேண்டும் என்று சொல்லியிருக்கின்றனர். எனவே, ஓபிஎஸ் தான் முடிவு செய்ய வேண்டும்.

ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் 2 லட்சம் பேர் முன்னிலையில் தலைவர் விஜய் கருத்துகளைத் தெளிவாக சொல்லியிருக்கிறார். கூட்டணியை பொறுத்தவரையில் யார் வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம். கருத்துக்கள் கூறலாம். அதை தலைமை தான் முடிவு செய்யும். பொறுத்திருந்து பாருங்கள், அதிமுகவில் உள்ள முக்கிய புள்ளிகள் மிக விரைவில் வந்து தவெகவில் இணைவார்கள். அதை நீங்கள் பார்க்கத் தான் போகின்றீர்கள்” என்றார்.