வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் பிஹார் வாக்காளர்களையும் தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்க்க முயற்சி நடப்பதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை(எஸ்ஐஆர்) இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் பிஹார் வாக்காளர்களையும் தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்க்க முயற்சி நடப்பதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக திமுக தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்ட அறிக்கையில், ” தேர்தலை முறையாக, ஒழுங்காக, நேர்மையாக, உண்மையாக நடத்துவதுதான் தேர்தல் ஆணையத்தின் ஒரே வேலை. ஆனால், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் நடப்பது எல்லாம் குளறுபடிகளின் உச்சமாக இருக்கிறது. இதற்கு முன்பு தேர்தல் நடந்த மாநிலங்களில் ஒரு மாநிலத்தில் வாக்காளராக இருப்பவர்கள், இன்னொரு மாநிலத்திற்கு வந்து வாக்களித்திருக்கிறார்கள். ஒரே ஒரு வீட்டு முகவரியில் 66 போலி வாக்காளர்கள் இருந்திருக்கிறார்கள். ஒருவருடைய வீட்டு முகவரியில் 500 வாக்காளர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என ஆதாரத்தோடு செய்திகள் வந்தன.
இதனை தமிழ்நாட்டிலும் எஸ்ஐஆர் (SIR) என்ற பெயரில் செய்யத் துணிந்துள்ளது தேர்தல் ஆணையம்; அதாவது எஸ்ஐஆர் (SIR) படிவத்தில், சமர்பிக்க தேவையான ஆவணங்களின் பட்டியலில், 01.07.2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்ட பிஹாரின் சிறப்பு தீவிரத் திருத்தத்தின் வாக்காளர் பட்டியலின் பிரதி என்று குறிப்பிட்டுள்ளது தேர்தல் ஆணையம். இது முறைகேடு இன்றி வேறென்ன? தமிழர்களின் வாக்குகளை நீக்கவும், பிஹார் மக்களை தமிழ்நாட்டின் வாக்காளராக மாற்றத் தான் இந்த SIR ஆ? தேர்தல் ஆணையம் ஓடி, ஒளியாமல் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது






