தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருப்பணிகளை நிறுத்தக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்(எஸ்ஐஆர்) கடந்த நவம்பர் 4-ம் தொடங்கியது. இப்பணிகள் டிசம்பர் 4-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பருவமழை, அறுவடை நேரம் உள்ளிட்ட பிரச்னைகளை மேற்கொள்காட்டி திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் எஸ்ஐஆர் பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கேரள அரசும் உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை எஸ்ஐஆர் பணிகளை ஒத்திவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு, மேற்குவங்க முதலமைச்சர் பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். அதில், தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள எஸ்ஐஆர் குழப்பமானது, வற்புறுத்தும் வகையில் உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இந்த செயல்முறை தொடங்கியதிலிருந்து பல அதிகாரிகள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். டிசம்பர் 4-ம் தேதிக்குள் இந்தப் பணிகளை முடிக்க முடியாது. எனவே அதை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

எஸ்ஐஆர் பணி நெருக்கடியால் கேரளா , தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பிஎல்ஓக்கள் தற்கொலை செய்யும் அவலம் தொடர்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகளை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை நிறுத்த உத்தரவிடக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழ்நாட்டில் நடைபெறும் தீவிர சிறப்பு வாக்காளர் திருத்தம் என்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது முரணானது என்று தெரிவித்துள்ளது.