தமிழ்நாட்டின் மீது வரலாற்றுப் போரை மத்திய அரசு நிகழ்த்தி வருகிறது என்று  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்று செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர், டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று (டிசம்பர் 16) கூறுகையில், “பாஜக அரசு தொடர்ச்சியாக அரசியல் அமைப்பை சிதைத்து வருகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை சீர் குலைப்பதற்கு 11 ஆண்டுகளாக முயற்சி செய்கிறார்கள். அதன்படி, பெயரை மாற்றுவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவர உள்ளார்கள். ஆனால், இந்த திட்டம் மகாத்மா காந்தி பெயரிலேயே இருக்க வேண்டும்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை கொரோனா காலத்தில் அமல்படுத்தவில்லை என்றால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்திருப்பார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மறுநாள் (டிசம்பர் 18) சென்னையில் மக்கள் பெருந்திரள் போராட்டம் நடைபெறும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், கல்வி நிதி, பேரிடர் பெருவெள்ளம் உள்ளிட்டவற்றுக்கான நிதியை கொடுக்காமல், மாநிலத்தின் மீது நிதி சுமையை ஏற்படுத்துகிறது.

மத்திய அரசுக்கு தமிழ்நாட்டைப் பிடிக்கவில்லையா? தமிழக மக்களைப் பிடிக்கவில்லையா? தமிழ் மொழியைப் பிடிக்கவில்லையா? தமிழ்நாட்டின் மீது ஒரு வரலாற்றுப் போரை மத்திய அரசு நிகழ்த்தி வருகிறது. மகாத்மா காந்தி பெயரில் மீண்டும் இந்த திட்டத்தை நடைமுறையில் கொண்டு வர வேண்டும். இந்த திட்டத்தை சிதைக்க நினைக்கும் பாஜக அரசு 125 நாள் என்று கூறி அதற்கான தொகையை மாநிலம் 40 சதவீதம், யூனியன் பிரதேசம் 10 சதவீதம் வழங்க வேண்டும் என கூறி மாநிலங்கள் மீது நிதிச்சுமையை சுமத்துகிறது. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது” என்றார்.