தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

பொங்கல் திருவிழாவை எழுச்சியோடு கொண்டாடி மகிழ 2024 -25-ம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் பொங்கல் பரிசு வழங்க இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 9 லட்சம் பேருக்கு பொங்கல் போனஸ் வழங்க 183 கோடியே 86 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன்படி ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு அரசு பணியாளர்கள் & ஆசிரியர்களுக்கு மூவாயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தொகுப்பூதியம், சிறப்புகால முறை ஊதியம் பெறும் அரசு பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்கப்படும். இதே போன்று, குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணியாற்றிய முழு மற்றும் பகுதி நேர பணியாளர்களுக்கும் ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.