விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூரில் மத்திய அரசின் தொழிலாளர் துறை சார்பில் தினக்கூலி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் மேலூர் துரைசாமிபுரம், சொக்கநாதன் புத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் டோடி டேப்பர் எனப்படும் கள்ளு சீவுபவர்கள் அடையாள அட்டை பெறுவதற்காக விண்ணப்பம் செய்தனர்.

கடந்த முகாமில் விண்ணப்பம் செய்த 50க்கும் மேற்பட்டோருக்கு டோடி டேப்பர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

தமிழகத்தில் கள் இறக்க தமிழக அரசு தடை விதித்திருப்பதால் தற்போது தமிழக அரசின் மாநில மரமான பனை மரங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள பனையேறும் தொழிலாளர்களும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்து வருகின்றனர்.

கள்- பனை தொழிலாளர்களின் கோரிக்கை

வருடத்தில் 6 மாதங்கள் மட்டுமே பதநீர் மற்றும் கருப்பட்டி உற்பத்தி இருக்கும் நிலையில், இளைஞர்கள் புதியவர்கள் இந்த தொழிலுக்கு வர தயக்கம் காட்டும் நிலை இருக்கிறது.

இதனால், அண்டை மாநிலங்களைப் போல தமிழகத்திலும் “கள்” இறக்க அனுமதி வழங்கி பனை மரங்களையும், அதனை சார்ந்துள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பனைத் தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தேர்தல் அறிக்கையில் சொன்னது என்னாச்சு

மத்திய அரசு “கள்ளை உணவு பொருள்” பட்டியலில் இணைத்துள்ள நிலையில், தமிழகத்தில் கள் இறக்குவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பான அறிவிப்பு 2021 திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றது. முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பனை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள் இறக்க அனுமதி

மேலும் தேர்தல் அறிக்கை தயாரிப்பில், பொது மக்களின் ஆலோசனைகளும் வரவேற்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள பனைத் தொழிலாளர்கள் வரும் சட்டமன்ற தேர்தல் திமுக வாக்குறுதி அறிக்கையில் “கள் இறக்க அனுமதி” வழங்கப்படும் என்ற அறிவிப்பு இடம்பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.