தமிழ்நாட்டில் தற்போது சிக்கன்குனியா காய்ச்சல் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, தமிழக சுகாதாரத்துறையும் மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

சிக்கன்குனியா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் சிக்கன்குனியா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்களிலும் நகர்ப்புறங்களிலும் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.
குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தென்காசி, தேனி, கடலூர் மற்றும் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்புகள் கண்டிறியப்பட்டுள்ளன.

அரசின் நடவடிக்கை:
மாவட்ட சுகாதார அலுவலர்களுக்குக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நடமாடும் மருத்துவக் குழுக்கள் தயார்
வைக்கப்பட்டுள்ளன.
அறிகுறிகள் :
சிக்கன்குனியா வைரஸ் பாதித்த கொசு கடித்த 3 முதல் 7 நாட்களில் அறிகுறிகள் தோன்றும் என்று சுகாதாரத்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. மேலும், உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் சுகாதாரத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
திடீர் காய்ச்சல்: மிக அதிகப்படியான உடல் வெப்பம்.
கடுமையான மூட்டு வலி: இதுவே இந்த நோயின் முக்கிய அடையாளம். கை, கால், மணிக்கட்டு மற்றும் முழங்கால்களில் தாங்க முடியாத வலி ஏற்படும்.
தசை வலி மற்றும் தலைவலி: உடல் முழுவதும் சோர்வாக இருக்கும்.
உடல் சோர்வு: நோய் குணமான பின்பும் சில காலம் கடும் சோர்வு நீடிக்கும்.
சிகிச்சை முறை
உடலுக்கு முழுமையான ஓய்வு தேவை மற்றும் திரவ உணவுகளான நீர்ச்சத்து குறையாமல் இருக்க அதிக தண்ணீர், இளநீர் மற்றும் பழச்சாறுகளை அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள்






