‘டிட்வா’ புயலால் பேரழிவை சந்தித்த இலங்கைக்கு சீனா அவசரகால நிதியுதவியாக 10 லட்சம் டாலர் வழங்கியுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வட தமிழக – புதுவை கடற்பகுதிகளில் பகுதிகளில் நிலவிய ‘டிட்வா’ புயல் இலங்கையின் இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. புயலால் பெய்த தொடர் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.இதன் காரணமாக பல நகரங்கள் நீரில் மிதக்கின்றன. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.

மேலும் உயிருடன் பலர் மண்ணில் புதைந்தனர். ஏராளமானோர் காணாமல் போய் உள்னர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். ஒரு லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இலங்கை அரசு அவசரநிலையை அறிவித்துள்ளது.

இலங்கையில் 2,66,114 குடும்பங்களைச் சேர்ந்த 9,68,304 பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ‘டிட்வா’புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சீனா அவசரகால நிதியுதவியாக 10 லட்சம் டாலர் அளித்துள்ளது. இதற்கிடையே இலங்கைக்கு இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இலங்கையுடன் மீட்புப்பணிகளில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையும் இந்திய விமானப்படையும் ஈடுபட்டுள்ளன. இலங்கையிலுள்ள இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால் +94 773727832 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.