மதுரையில் நேற்று நடைபெற்ற தேஜக கூட்டணி பொதுக்கூட்டம் முடிந்து காரில் புறப்பட்டு சென்ற போது, அதிமுக-அமமுக ஆதரவாளர்கள் நெடுஞ்சாலையில் வைத்தே சண்டையிட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் பிரசார பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. கூட்டம் முடிந்த உடன், வாகனங்களில் அதிமுக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பல்வேறு வாகனங்களில் நேற்றிரவு வெளியேறினர்.

மதுரை சிந்தாமணி டோல்கேட் சந்திப்பு அருகே டிடிவி.தினகரன் தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள், டிடிவி.தினகரனுக்கு முன்பாக கார்களில் சென்றனர்.

டிடிவி.தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வாகனங்கள் ஹார்ன் அடித்து வழி விடுமாறு கேட்டனர். ஆனால் அவர்கள் வழி விட மறுத்து தொடர்ந்து ரோட்டை மறித்துச் சென்று அராஜகம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் டிடிவி.தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முன்னேறி செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கார்களை நிறுத்தி இறங்கிய ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்களுக்கும், டிடிவி.தினகரன் ஆதரவாளர்களுக்கும் மோதல், கைகலப்பு ஏற்பட்டது. இதில் டிடிவி. தினகரனின் ஆதரவாளர் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது. உடனே, அருகில் இருந்தவர்கள் இரத்த காயங்களுடன் இருந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக- அமமுகவினர் இடையே சண்டை ஏற்பட்டது, அரசியலில் இதெல்லாம் சாதாரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.