“ஜனநாயகன்” படத்திற்கு 70% முதல் 85% வரை டிக்கெட் வசூலில் ஷேர் கேட்பதால், படத்தை வாங்குவதில் தாமதம் ஏற்படுகிறது என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் குற்றம்சாட்டி உள்ளார்.

வரும் 9ம் தேதி, விஜய்யின் “ஜனநாயகன்” படமும், நடிகர் சிவகார்த்திகேயனின் “பராசக்தி” படமும், இந்த பொங்கல் பண்டிகையை யொட்டி, வெளியாக உள்ளது.
தமிழ்நாட்டில் அதிக தியேட்டர்கள் பராசக்தி படங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் விஜயின் ஜனநாயகப் படத்திற்கு தியேட்டர்கள் முறையாக ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசியல் காரணமா?
இந்நிலையில் ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் வெளியிடுவதால் ‘பராசக்தி’ மீது அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுவதாகப் பரவிய தகவலுக்கும், ‘ஜனநாயகன்’ படத்தின் முன்பதிவு தாமதத்திற்கு அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்று பரவிய தகவலுக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் செய்தியாளர்களுக்கு பதிலளித்துள்ளார்.

80% வரை ஷேர்..!
விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு 60 சதவீத திரையரங்கும், சிவகார்த்திகேயனின் பராசக்தி-க்கு 40% திரையரங்கும் ஒதுக்குவதாகத்தான் இருந்தது. ஆனால் ஜனநாயகன் படத்திற்கு அவர்கள் வசூலில் 75% முதல் 80% வரை ஷேர் கேட்கிறார்கள். இதனால் “ஜனநாயகன்” படம் புக்கிங் தாமதமாகி வருகிறது.
“70 சதவீதம் வரை திரையரங்க உரிமையாளர்கள் தர தயாராக உள்ள போதும் அவர்கள் 75 முதல் 80% வரை கேட்கிறார்கள். இதனால் திரையரங்க உரிமையாளர்களுக்கு எந்தவித லாபமும் இருக்காது;
கடந்த முறை கோட் திரைப்படத்திற்கும் இதே போன்று தான் பிரச்னை இருந்தது” என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் விஜய் அவர்களுக்கும் தெரியும். இருப்பினும், அவர் பதில் ஏதும் சொல்லவில்லை என்று திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.






