அசாமில் ஜெம் ஸ்ரீராம் முழக்கத்துடன் பள்ளிக்குள் புகுந்து கிறிஸ்துமஸ் பொருட்களை விஸ்வஹிந்த் பரிஷத்(விஹெச்பி), பஜ்ரங் தள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் நல்பாரி மாவட்டத்தில் பனிகான் கிராமத்தில் உள்ள செயின்ட் மேரி பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த விஹெச்பி, பஜ்ரங் தள் அமைப்பினர் கிறிஸ்துமஸ் தின நிகழ்ச்சிக்காக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை சேதப்படுத்தினர். அத்துடன் பேனர், சுவரொட்டிகளை தீ வைத்து எரித்தனர். அப்போது அவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என முக்கமிட்டனர்.
பின்னர் அவர்கள் நல்பாரி நகரில் கிறிஸ்துமஸ் பொருட்களை விற்கும் பல்வேறு கடைகளுக்குச் சென்று தீ வைத்தனர். ஜெயின் மந்திர் அருகே உள்ள கடைகளுக்கு முன்னாள் விற்கப்பட்ட கிறிஸ்துமஸ் பொருட்களையும் அவர்களை தீ வைத்து எரித்தனர். அத்துடன் கிறிஸ்துமஸ் பொருட்களை விற்கும் பல வணிக வளாகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கினர். அத்துடன் அப்பொருட்களை கடையில் இருந்து அள்ளி சாலையில் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக விஹெச்பி நல்பாரி மாவட்ட செயலாளர் பாஸ்கர் தேகா கூறுகையில், “நாங்கள் இங்கு கிறிஸ்தவ பண்டிகைகளை விரும்பவில்லை. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எந்த பண்டிகை தொடர்பான பொருட்களையும் வர்த்தகம் செய்கிறோம். ஆனால், இந்திய வம்சாவளியைச் சாராத பண்டிகையுடன் வணிகம் செய்வதை நாங்கள் ஏற்கவில்லை,” என்றார்.





