சிவகாசி அருகே, சீல் வைக்கப்பட்ட பட்டாசு குடோனில் வெடி பொருட்கள் திருடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

விஏஓ அளித்த புகார்

விருதுநகர் மாவட்டம்  சிவகாசி அருகே கணஞ்சாம்பட்டியில் கிராம நிர்வாக அலுவலர், பட்டாசு உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு குடோனில் இருந்து வெடி பொருட்கள் காணாமல் போனதாக வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த பட்டாசு குடோன் தாயில்பட்டி அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த கணேச பாண்டியன் என்பவருக்கு சொந்தமானது.

பட்டாசு குடோன் – சீல் வைப்பு

இந்த குடோனில் கணேச பாண்டியன் சட்டவிரோதமாக எந்தவித அனுமதியும் இன்றி நீதிமன்றத்தால், தடை செய்யப்பட்ட சரவெடிகள் பதுக்கி வைத்திருந்ததாக கடந்த ஆகஸ்ட் மாதம் காவல் துறையினரால் சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளை ஆய்வு செய்யுமாறு நீதிமன்ற அறிவுறுத்தலின்படி கடந்த 4ஆம் தேதி பட்டாசுகளை கிராம நிர்வாக அலுவலர் சக்தி கணேசன் பார்வையிட்டார். அப்போது, பூட்டி இருந்த குடோனில் பட்டாசுகள் காணாமல் போய் உள்ளதையும் குடோன் காலியாக இருந்ததையும் அறிந்து வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசாரின் தேடுதல் வேட்டை

இதன் அடிப்படையில், வெம்பக்கோட்டை காவல் நிலைய போலீசார் குற்றவாளிகளை தீவிரமான தேடுதலில் ஈடுபட்டனர்.

சிக்கிய 7 பேர் – தப்பிய உரிமையாளர்

இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட, பட்டாசு குடோவனின் உரிமையாளர் கணேச பாண்டியன் மற்றும் அவருக்கு உதவியாக சிலர் செயல்பட்டதை போலீசார் கண்டிறிந்தனர்.

இதையடுத்து, இந்த வழக்கில்
7 பேரை வெம்பக்கோட்டை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் குடோன் உரிமையாளர் கணேஷ் பாண்டியன் உட்பட இருவரை தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருடப்பட்ட பட்டாசுகள் (வெடி பொருட்கள்) மற்றும் அவற்றை கடத்த பயன்படுத்தப்பட்ட 3 சரக்கு வேன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.