சபரிமலையில் மண்டல பூஜையின் உச்ச நிகழ்வாக இன்று (டிசம்பர். 27) ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.
கேரளாவில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு மாநிலம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து இருமுடி கட்டி சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இதற்காக ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் 16-ம் தேதி மண்டல வழிபாட்டுக்காக நடைதிறக்கப்பட்டது. 41 நாள் வழிபாட்டின் உச்ச நிகழ்வாக இன்று மண்டல பூஜை நடைபெற உள்ளது. இதையொட்டி, சுவாமிக்கு 420 பவுன் எடையிலான தங்கக் கவச அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.
கடந்த 23-ம்3-ம் தேதி ஆரன்முலா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. நேற்று மதியம் பம்பையை வந்தடைந்த தங்க அங்கி, பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது. பின்னர் தலைச்சுமையாக நீலிமலை வழியாக கொண்டு செல்லப்பட்ட தங்க அங்கிக்கு, தேவசம் போர்டு சார்பில் சரங்குத்தியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன் பின்னர் தங்க அங்கியை தந்திரி மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து 18-ம் படி வழியே கொண்டு செல்லப்பட்டு, மாலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இரவு 10.45 மணி வரை ஏராளமான பக்தர்கள் தங்கத்தில் ஜொலித்த ஐயப்பனை தரிசனம் செய்தனர். பின்பு அங்கி அகற்றப்பட்டு 11 மணிக்கு நடை சாத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் மண்டல பூஜையை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகின்றன. காலை 10.10 முதல் 11.30 மணிக்குள் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும். இத்துடன் மண்டல பூஜை வழிபாடுகள் நிறைவடைய உள்ளன. டிசம்பர் 28, 29-ம் தேதிகளில் சந்நிதானம் சுத்தம் செய்யப்பட்டு, மகர வழிபாட்டுக்காக டிசம்பர் 30-ம் தேதி மாலையில் கோயில் நடை திறக்கப்படும் என்று தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





