கோவையில் 20 வயது மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பிரபல ஜவுளிக்கனை ஊழியரை போலீசார் கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், தாளவாடியைச் சோ்ந்தவர் மகேஷ். இவர், கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் பிரபல துணிக்கடை ஒன்றில், வாகன நிறுத்துமிடத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.
அதே ஜவுளிக் கடையின் உரிமையாளர் வீட்டில் காந்திபுரத்தைச் சேர்ந்த 40 வயதுப் பெண் ஒருவர் வேலை செய்து வந்தார். இவர் வேலைக்கு வரும்போது, தனது 20 வயது மாற்றுத்திறனாளி பெண்ணையும் அழைத்து வந்துள்ளார். இதை கவனித்த, மகேஷ் அந்த மாற்றுத்திறனாளி பெண்ணை அடைய திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், அந்தப் பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற மகேஷ் அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின்பேரில் மகேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.






