கடும் பனி பொழிந்து வருவதால் பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ கிலோ 2,000 ரூபாக்கு விற்பனையாகி வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. மாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை பனி கொட்டி வருவதால் பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக மல்லிகை மற்றும் முல்லைப் பூக்கள் மலரும் முன்பே பனியால் கருகி விடுகிறது. இதனால் பூக்களின் உற்பத்தி குறைந்ததால் விலை அதிகரித்து காணப்படுகிறது. இது தவிர தற்போது சபரிமலை சீசன் உள்ளதால் பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கோவையில் நேற்று ஒரு கிலோ மல்லிகை 2,000 ரூபாய்க்கு விற்பனையானதால் பெண்கள், வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும் போது கோவையில் ஒரு வாரத்திற்கு மேலாக கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதன் காரணமாக பூக்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன்படி ஒரு கிலோ மல்லிகைப்பூ 2,000 ரூபாய், முல்லைப்பூ 1,200 ருபாய், செவ்வந்தி 100 ரூபாய், சம்பங்கி 200 ரூபாய், ரோஜா 160 முதல் 200 ரூபாய் வரை விற்பனையானது. இந்த விலை பொங்கல் பண்டிகை வரை இருக்கும், அதன் பின்னர் பூக்கள் விலை படிப்படியாக குறையும் என்றனனர்.