கேரளாவில் பிரபல நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில் 17.2.2017 அன்று பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து கேரவனில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த கும்பல் நடிகை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடிகை அளித்த புகாரின் பேரில், கேரளா மாநில குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரித்து வந்தனர். அப்போது பெரும்பாவூர் அருகே கூவப்படியை சேர்ந்த பல்சர் சுனில் என்ற சுனில் குமார் உள்பட சிலர் நடிகையை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. அத்துடன் சுனில் அந்த நடிகையின் கார் டிரைவராக இருந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் மலையாள பிரபல நடிகர் திலீப்புக்கும், நடிகைக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, திலீப் சதி திட்டம் தீட்டி நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடிகர் திலீப், பல்சர் சுனில் உள்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளம் முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும்,. திட்டமிட்டு தன்னை சிக்க வைத்துள்ளதாக நடிகர் திலீப் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் 251 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த வழக்கில் இன்று (டிச.8) தீர்ப்பளித்த எர்ணாகுளம் நீதிமன்றம், நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி விடுதலை செய்துள்ளது. மேலும் அவரது நண்பர் சரத் என்பவரை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் விடுவித்துள்ளது. மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், சுனில் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என்றும் எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கான தண்டனை குறித்து டிசம்பர் 12-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.






