கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறை அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் வைகை நதிக்கரை நாகரீகம் குறித்த அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன, முதல் மூன்று கட்ட அகழாய்வு, மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் தொடங்கி செப்டம்பர் வரை அகழாய்வு பணிகள் நடைபெறும். அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்கள், அதன் காலம், அதனை பற்றிய குறிப்புகளை மத்திய தொல்லியல் துறையின் காபா அமைப்பிடம் தமிழக தொல்லியல் துறை சமர்ப்பிக்க வேண்டும்.

இதனை ஆய்வு செய்தபின் அடுத்தகட்ட அகழாய்வு நடத்த காபா அமைப்பு அனுமதி வழங்கும். பத்தாம் கட்ட அகழாய்வு பணிகள் தாமதமாக தொடங்கியதால், 2025 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டன.திறந்தவெளி அருங்காட்சியக பணிகளும் நடந்ததால், 2025-ல் அகழாய்வு பணிகள் நடைபெறவே இல்லை. பத்தாம் கட்ட அகழாய்வு பணிகள் குறித்த அறிக்கையை, மத்திய அரசின் காபாவிடம் தமிழக தொல்லியல் துறை சமர்ப்பித்துவிட்டது. இந்த நிலையில், கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறை அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. வரும் ஜனவரியில் திறந்தவெளி அருங்காட்சியகம் திறந்த பின், 11-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.