காங்கிரஸ் கட்சியை கலைத்து விட வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக நகர, ஒன்றிய, பேரூர் கழகங்களில் உள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,” பிஹாரில் என்டிஏ கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட வேண்டும். ஏனெனில், நாட்டுக்கும் ஊருக்கும் காங்கிரஸ் கட்சி ஆகாது. ஏனெனில், தற்போதைய காங்கிரஸ் கட்சி காந்தி, நேரு, நேதாஜி ஆகியோர் தொடங்கிய காங்கிரஸ் கட்சி இல்லை. இன்றைய காங்கிரஸ் கட்சி நாட்டை காட்டிக் கொடுக்கவும், தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் கட்சியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு நாட்டுப்பற்று இல்லை,
இப்படிப்பட்ட வீணான காங்கிரஸ் கட்சியை திமுக தான் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. பிஹார் தேர்தல் முடிவுதமிழ்நாட்டில் எதிரொலிக்கும்., தமிழ்நாட்டில் , 220-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக கூட்டணி வென்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார்.ஏனெனில் வெற்றி மிக அருகில் உள்ளது” என்றார்.






