விசிக, மதிமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் லக்ஷ்மண் ரேகையை மதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் குழு அமைத்துள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள், கூட்டணி ஆட்சி என்று கூறி வரும் தவெக தலைவர் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. ராகுல் காந்தியின் நண்பர் என்று கூறப்படும் பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்ற குற்றச்சாட்டை இதுவரை காங்கிரஸ் தலைவர்கள் மறுக்கவில்லை.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்யை பாராட்டிய பிரவீன் சக்கரவர்த்தி, உத்தரப்பிரதேசத்தை விட தமிழகத்தன் கடன் அதிகமாக உள்ளது என்று விமர்சித்தார். இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட சிலர் கண்டனம் தெரிவித்தனர். இதே போல திமுக கூட்டணி கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் திமுக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் உள்கட்சி பிரச்னையில் கூட்டணி கட்சிகள் தலையிடக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,” ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது: காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது? தங்களது உள்கட்சி விஷயங்களில் இதுபோன்ற பொது கருத்துக்களை இக்கட்சிகள் ஏற்றுக்கொள்வார்களா? தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை திரு்@WriterRavikumar திரு @duraivaikooffl , திரு. சண்முகம், திரு். வீரபாண்டியன் ஆகியோரிடம் ‘உங்கள் கட்சி உறுப்பினர்களை இப்படிச் சமாளியுங்கள்’ என்று சொன்னால், அவர்கள் அதை சகிப்பார்களா?
கூட்டணிகள் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உருவாகின்றன, பொது அழுத்த அரசியலால் அல்ல. ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவை ஊடக அறிக்கைகள் மூலம் அல்ல; கூட்டணி மேடைகளுக்குள் பேசப்பட வேண்டும். ஒரு கூட்டணி கட்சியின் உள்கட்சி செயல்பாடுகளை பொது வெளியில் விமர்சிப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது; இது BJP–RSS அமைப்புகளுக்கு எதிரான கூட்டு வலிமையையே பலவீனப்படுத்தும். இது கட்சி செயல் வீரர்கள் தன்மான உணர்வை தூண்டும்.
CPI & @cpimspeak தேசிய தலைமைகள் தங்களது மாநில செயலாளர்களுக்கு குறைந்தபட்ச அரசியல் மரியாதையையும் ,கூட்டணி ஒழுக்கத்தையும் பேண அறிவுறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல், அண்ணன் @MDMKVaiko ,@thirumaofficial அண்ணனும், கூட்டணி கட்சிகளுடன் நடக்கும் விஷயங்களில் ‘லக்ஷ்மண் ரேகை’யை மதிக்குமாறு தங்களது எம்.பிக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். ஒற்றுமை என்பதன் அர்த்தம் மௌனம் அல்ல. ஆனால், அது கட்டுப்பாட்டையும் பொறுப்பையும் குறிக்கிறது. கூட்டணி தர்மம் அனைவருக்கும் சமமாகவே பொருந்த வேண்டுமே ஒழிய அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல” என்று பதிவிட்டுள்ளார்.






