கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ விரைவில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் ஏற்கெனவே பிரேத பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உரிமையாளர்கள், காயமடைந்தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என ஏராளமானோரிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது..
இதேபோல் தவெக மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் கரூர் கலெக்டர் அலுவலக பயணியர் மாளிகையில் உள்ள சிபிஐ, சிறப்பு அலுவலகத்தில் ஆஜராகி தங்களது தரப்பு விளக்கங்களை அளித்திருந்தனர்.
மேலும் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட வாகனத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் பதிவுகளும் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கரூர் மாவட்ட அரசு தரப்பு மற்றும் போலீஸார் வழங்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதன் அடிப்படையில் தவெக தலைவர் விஜயை சம்மன் அனுப்பி நேரில் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். கரூருக்கு விஜயை அழைத்தால் பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருப்பதால், சென்னை சிபிஐ அலுவலகத்தில் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக தவெக தலைவர், விஜய்க்கு டெல்லியில் இருந்து சம்மன் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






