கனடாவில் இந்தியப் பெண் ஹிமான்ஷி குரானா கொடூரமாக கொலை செய்யப்படுள்ளார். இக்கொலை தொடர்பாக அவரது ஆண் நண்பரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கனடாவின் டொராண்டோவில் ஸ்ட்ராச்சன் அவென்யூ மற்றும் வெலிங்டன் தெருவில் வசித்து வந்தவர் இந்திய பெண்ணான ஹிமான்ஷி குரானா(30) இவர் கடந்த 19-ம் தேதி காணாமல் போனார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார், குரானாவை தேடி வந்தனர். இந்த நிலையில் ஒரு குடியிருப்பில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அப்போது அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
போலீஸார் விசாரணையில், . ஹிமான்ஷி குரானாவை கொலை செய்ததாக அவரது ஆண் நண்பரான அப்துல் கஃபூரி(32) என்பவரை கைது செய்ய சட்ட அமலாக்கப் பிரிவு நாடு தழுவிய வாரண்ட் பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக ஹிமான்ஷி குரானா, அப்துல் கஃபூரி ஆகியோரின் படங்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர். போலீஸ் அறிக்கையின்படி கஃபூரியும், குரானாவும் நெருக்கமான உறவில் இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொராண்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் குரானாவின் மரணம் குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தியதுடன், துயரமடைந்த குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் கூறியுள்ளது. “டொராண்டோவில் இளம் இந்தியரான ஹிமான்ஷி குரானாவின் கொலையால் நாங்கள் மிகவும் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளோம். இந்த ஆழ்ந்த துயர தருணத்தில் அவரது துயரத்தில் வாடும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. கஃபூரி பிடிபட்டால் தான் குரானாவை எதற்கு அவர் கொலை செய்தார் என்ற விவரம் தெரிய வரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.





