ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு மற்றும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பணியாற்றி வரும் சுழற்சி–1 மற்றும் சுழற்சி–2 கௌரவ விரிவுரையாளர்கள், தங்களின் நீண்டநாள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்பு புறக்கணிப்பு மற்றும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர்கல்வித் துறையில் பல ஆண்டுகளாக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்கள், நிரந்தர ஆசிரியர்களுக்கு இணையான பாடப்பளு, தேர்வு பணிகள், மதிப்பீடு, மாணவி வழிகாட்டுதல் உள்ளிட்ட கல்விச் சேவைகளை மேற்கொண்டு வருகிற போதிலும், ஊதியம் மற்றும் சமூக பாதுகாப்பு நலன்களில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்தின் போது, UGC நிர்ணயம் செய்த ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், 12 மாதங்களுக்கான முழு ஊதியம் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும், பி.எஃப் (PF) மற்றும் EPF திட்டங்கள் அறிவித்து உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும், மகப்பேறு விடுப்பு உரிமை வழங்கப்பட வேண்டும், மற்றும் பணிக்கொடை வழங்கப்பட வேண்டும் ஆகிய முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

உரிமைகளை மீட்டெடுக்க போராட்டம்
இந்தப் போராட்டம் குறித்து, கௌரவ விரிவுரையாளர்கள் கூறுகையில், “இந்தப் போராட்டம் கல்விக்கு எதிரானது அல்ல; தங்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்க அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்திலேயே மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தனர்.
மாணவியர்களின் பாதுகாப்பும் பொதுமக்களின் நலனும் பாதிக்கப்படாத வகையில், போராட்டம் முழுமையாக அமைதியான முறையில் நடைபெற்றதாகவும் அவர்கள் கூறினர்.
போராட்டம் தொடர வாய்பபு
மேலும், வருடக்காலமாக தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று மட்டும் கண்களில் கருப்பு துணி கட்டி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைதியான வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. என்றும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை, கருப்பு துணி அணிந்து, வகுப்பு புறக்கணிப்பு மற்றும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் கூறினர்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் மாநில அரசும், கௌரவ விரிவுரையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து தீர்வு வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட விரிவுரையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






