தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ராகுல் காந்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக 272 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.
வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு தொடர்பாக தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி மற்றும் காங்கிரசுக்கு எதிராக 16 நீதிபதிகள், 123 ஓய்வுபெற்ற அதிகாரிகள், 14 முன்னாள் தூதர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பாதுகாப்பு படை அதிகாரிகள் என 272 பேர் வெளிப்படையாக குற்றம் சாட்டி கடிதம் எழுதியுள்ளனர்.
இந்திய அரசியல் சாசனம் மீது நடத்தப்படும் தாக்குதல் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ” இந்திய ஜனநாயகம் வன்முறையால் அல்ல, ஜனநாயகத்தின் அடிப்படை நிறுவனங்கள் நச்சு பேச்சுகள் மூலம் தாக்குதலுக்குள்ளாக்கப்படுகிறது. அரசியல் தலைவர்கள் மாற்று கொள்கைகளை உளப்பூர்வமாக வழங்கவில்லை. அதற்கு பதிலாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அரசியல் ஆதாயங்களுக்காக முன்வைக்கின்றனர்.
நீதித்துறையின் நேர்மை, நாடாளுமன்றத்தின் அரசியல் சாசன கடமைகளை கேள்விக்குள்ளாக்கினர். தற்போது, இந்திய தேர்தல் ஆணையம் மீது திட்டமிட்டே சதி நோக்கத்துடன் தாக்குதல் நடத்தப்படுகிறது. ராகுல் காந்தி, இந்திய தேர்தல் ஆணையம் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்துகிறார். இந்திய தேர்தல் ஆணையமே வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளது, 100 சதவீதம் ஆதாரம் இருக்கிறது என்று சொல்வதுடன் கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத்துகிறார். அத்துடன் அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அணுகுண்டுகள் போல, இந்திய தேர்தல் ஆணையம் ஒளிந்து கொள்ள இனி இடமே இல்லை என்கிறார்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் தவறு செய்த யாராக இருந்தாலும் மேல் அதிகாரிகள் முதல் கீழ்நிலை வரை யாரையும் சும்மா விடமாட்டோம் என மிரட்டுகிறார் இப்படி எல்லாம் பேசிய ராகுல் காந்தி, எந்த ஒரு புகார் அல்லது பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்யவும் இல்லை. இந்திய தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் நடவடிக்கையை வெளிப்படையாகத்தான் நடத்துகிறது. தகுதி இல்லாதவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு தகுதியானவர்களை வாக்காளர்களாக தேர்தல் ஆணையம் சேர்க்கிறது.
ஆனால், அரசியல் தோல்விகளால் ஏற்பட்ட விரக்தியை மறைக்க தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம்சாட்டுகின்றனர். இது ஒருவகை இயலாமையால் வெளிப்படும் கோபம். தொடர் தேர்தல் தோல்விகளால் ஏற்படும் விரக்தியின் வெளிப்பாடு. எனவே, இந்திய தேர்தல் ஆணையம் தமது வெளிப்படையான நடவடிக்கைகளை கடுமையாக தொடரத்தான் வேண்டும்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.






