எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அதிமுகவில் இணையமாட்டோம் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ள நிலையில், அவர் ஆதரவாளர்கள்  தவெகவுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்த, நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்த செங்கோட்டையன் தற்போது தவெக பக்கம் கரைசேர்ந்துள்ளார்.

இந்த நிலையில், இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால் ஓபிஎஸ், டி.டி.வி. தினகரன், சசிகலாவை இணைக்க வேண்டும் என்று பாஜக தலைமை, எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியது. ஆனால், அவர்களை இணைக்கும் பேச்சுக்கு இடமில்லை எடப்பாடி பழனிசாமி முற்றுப்புள்ளி வைத்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தமிழக பாஜக மேலிட பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் சென்னைக்கு நேற்று வந்திருந்தார். அவருடன் தமிழக பாஜகவினர் ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு கூட்டணி கட்சியினர் அவரை ஒரு நட்சத்திர ஓட்டலில் சந்தித்து பேசினர். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகளும் பியூஸ்கோயலை சந்தித்தனர். அப்போது ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் பாஜக கூட்டணியில் போட்டியிடுவதில் தனக்கு ஆட்சேபம் ஏதுமில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாக கூறப்படுகிறது. அத்துடன் ஓபிஎஸ்சுக்கு 3 தொகுதிகளில், டிடிவி தினகரனுக்கு 5 இடங்களும் பாஜக கூட்டணியில் போட்டியிட ஒதுக்க தயாராக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி பேசியதாக கூறப்படுகிறது.

ஆனால், எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அதிமுகவில் இணையமாட்டோம் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் ஆதரவாளர்களுடன் நடத்திய கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, வரும் நாட்களில் எடப்பாடி பழனிசாமிக்கு தகுந்த பாடம் புகட்டுவோம் என தெரிவித்தார். அத்துடன் அதிமுகவை தவிர வேறு எந்த கூட்டணியிலும் இணைவோம் என வைத்திலிங்கம் பேசியதை வழிமொழிவதாகவும் கூறினார்.

எனவே, தவெகவுடன் தேர்தல் கூட்டணி அமைக்க ஓபிஎஸ் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான பேச்சுவார்த்தையில் செங்கோட்டையன் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கெனவே டிடிவி தினகரனுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.