தேர்தல் களத்தில் எதிரிகளை வீழ்த்தி மீண்டும் கழக ஆட்சியை அமைத்திடுவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் உறுதிமொழி வாசித்தார். அதில், கொடைவள்ளல் தந்த கழகத்தை, அரண்போல் காத்து நின்ற நம் அம்மாவின் வழி நடக்க உறுதி ஏற்கிறோம். திராவிட மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். கழகம் காப்போம். வெற்றிக்காக எத்தகைய தியாகத்தையும் செய்திடுவோம்.
தமிழ்நாடு சிறக்க, தமிழ்நாடு தழைக்க உழைத்திடுவோம். ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்று திக்கெட்டும் வெற்றியைப் படைத்திடுவோம். திசையெட்டும் வெற்றியை அடைந்திடுவோம். அதற்காக, அயராது உழைப்போம். மீண்டும் கழக ஆட்சி அமைந்திட வெற்றிச் சங்கொலி முழங்குவோம். வீர சபதமேற்கிறோம். 2026-ல், கோட்டையிலே நமது வெற்றிக்கொடி பறக்கட்டும், கொள்கையிலே நமது முழக்கம் தொடரட்டும் என்று சூளுரைப்போம். சட்டமன்றப் பொதுத் தேர்தல் வருகிறது. இந்திய அரசியல் வரலாற்றில், தொடர்ந்து 3 முறை ஆட்சியைத் தந்தவர் எம்.ஜி.ஆர். இந்திய அரசியல் வரலாற்றில், ஆளும் கட்சியை தொடர்ந்து 2-வது முறையாக, ஆளுகின்ற இயக்கமாக்கி நம் கழகத்திற்கு, பெருமையைத் தேடித் தந்தவர் அம்மா.
‘எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்’ என்று சூளுரைத்த, நம் அன்புத் தாயின் சபதத்தை நிறைவேற்றிடும் வகையில் 2026-ல் நடைபெற உள்ள, சட்டமன்றப் பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆர். வகுத்த பாதையில், அம்மா கொள்கை வழியில் நின்று இரவு, பகல் பாராமல் அரும்பணியாற்றி, தேர்தல் களத்தில் எதிரிகளை வீழ்த்தி மீண்டும் கழக ஆட்சியை அமைத்திடுவோம் என்று உளமார உறுதி ஏற்கிறோம். இந்த உறுதியை தொண்டர்கள் ஏற்றுக் கொண்டனர். அதன் பிறகு அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






