தேர்தல் பேச்சுவார்த்தை முடிந்த பின் விரைவில் எங்கள் கூட்டணி குறித்து அறிவிப்போம். எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியடையும் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் அவர் இன்று (டிசம்பர் 27) செய்தியாளர்களிடம் கூறுகையில்,”தமிழ்நாட்டில் திமுக அரசை எதிர்த்து ஆசிரியர்கள், இளநிலை உதவி பேராசிரியர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் போராடி வருகிறார்கள். பெண்கள் மதுக்கடைகளுக்கு எதிராக போராடுகிறார்கள். தமிழ்நாட்டில் விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் திமுக அரசை எதிர்த்து போராடி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் திமுகவுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்திருக்கிறார்கள். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடையும்.

தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக வேளாண் துறை வளர்ச்சி என்று சொல்ல முடியாத அளவிற்கு மைனசில் உள்ளது. கடந்தாண்டு மைனஸ் 3.8 சதவீதம். இந்த ஆண்டு மைனஸ் 1.8 சதவீதம். கடந்த ஆண்டு உழவர்களின் பயிர் இழப்பீடு தொகை இன்னும் கிடைக்கவில்லை. தமிழக முதல்வருக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் கடனை மட்டும் அதிகமாக வாங்கி இருக்கிறார்கள். தமிழகத்திற்கு ரூ.9 லட்சத்து 55 ஆயிரம் கோடி கடன் உள்ளது. இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு தான். வட்டி மட்டும் ரூ.62 ஆயிரம் கோடி கட்டுகிறார்கள்.

தென்மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் கனிமவளக் கொள்ளை குறித்து நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். இதற்கு காட்பாதராக தென் மாவட்டத்தை சேர்ந்த ஒரு முக்கிய புள்ளி இருக்கிறார். மேற்கு தொடர்ச்சி மலையை அழித்து நாசப்படுத்த வேண்டும் என்று முடிவில் இருக்கிறார்கள். இதனால் உறுதியாக கனிமவள கொள்ளை குறித்து சிபிஐ விசாரணை வரும்.

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, ஒடிசா, பிஹார் என அனைத்து மாநிலங்களிலும் சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்து உள்ளார்கள். அங்கு சமூக நீதியை நிலைநாட்டும் அரசு உள்ளது. தமிழ்நாட்டில் சமூக அநீதி தான் உள்ளது. தமிழகத்தில் தொழில் முதலீடு வந்து விட்டதாக பொய்யான தகவலை திமுக அரசு பரப்பி வருகிறது. தேர்தல் பேச்சுவார்த்தை முடிந்த பின் விரைவில் எங்கள் கூட்டணி குறித்து அறிவிப்போம். எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியடையும். ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது. நீதிமன்ற தீர்ப்பை அரசு மதிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லாத சூழலை உருவாக்க வேண்டும்” என்றார்.