உலகின் மிக உயரமான 77 அடி ராமர் சிலையை கோவாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 28) திறந்து வைக்கிறார்.

கோவாவின் கனகோனாவில் (தெற்கு கோவா) உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தின் 550வது ஆண்டு விழாவை முன்னிட்டு உலகின் மிக உயரமான ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை இன்று பிற்பகல் 3,45 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இதற்கான பிராண பிரதிஷ்டை பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, பக்தர்கள் மற்றும் விருந்தினர்களுக்கான தரிசனம் மற்றும் சபா காரியக்ரமம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீனிவாஸ் டெம்போ கூறுகையில், மடத்தின் 550-வது ஆண்டு விழாவை முன்னிட்டு 77 அடி உயர ராமர் சிலை திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்வில் சுமார் 1.2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார். குஜராத்தில் ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதார் ஸ்ரீராமரின் சிலையை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மடத்தின் வளாகத்தில் சிறப்பு ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது.