இடைநிலை ஆசிரியர்கள் மீது, திமுக அரசு அடக்குமுறையை ஏவி கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று (டிசம்பர் 26) வெளியிட்டுள்ள அறிக்கையில்,” சம வேலைக்கு சம ஊதியம் கோரி, சென்னையில் இன்று போராடிய இடைநிலை ஆசிரியர்கள் மீது, திமுக அரசு அடக்குமுறையை ஏவி கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து பொதுமக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, ஐந்து ஆண்டுகளாகியும், எந்த வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது. திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 311-ல், சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என கூறியிருந்ததை நிறைவேற்றக் கோரி தமிழக பாஜக சார்பில் பலமுறை வலியுறுத்தி வருகிறோம்.

மேலும், இடைநிலை ஆசிரியர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தும், கவன ஈர்ப்புப் போராட்டங்கள் நடத்தி வலியுறுத்தியும், திமுக அரசு அவர்களைக் கண்டுகொள்ளாமல் வஞ்சித்து வருகிறது. தங்கள் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் மீது, கைது நடவடிக்கை மேற்கொண்டு, அவர்களை ஒடுக்குவதையே முழு நேரப் பணியாக செய்து வருகிறது திமுக அரசு. கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளையே ஐந்து ஆண்டுகளாக நிறைவேற்றாமல், மீண்டும் ஒரு தேர்தல் அறிக்கை குழுவை அமைக்க முதல்வர் ஸ்டாலினுக்குக் கூச்சமாக இல்லையா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.