தமிழர் திருநாளான தைப்பொங்கல் வரும் 14ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளநிலையில், திண்டுக்கல் மாவட்டம் கோபால் பட்டி அருகேயுள்ள பாறைப்பட்டியில் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
மண்பானைகளுக்கு குறையாத மவுசு!
இங்கு கால் படி, அரை படி, ஒரு படி, இரண்டு படி என பல்வேறு அளவுகளில் பொங்கல் பானைகள் தயாரிக்கப்பட்டு, வண்ணம் பூசும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இத்தொழிலாளர்கள் தயாரிக்கும் பானைகள் உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, பழனி, வடமதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு அனுப்பும் பணியில் மும்முரமாக உள்ளனர்.

பானை தயாரிக்கும் தொழிலாளர்களின் கோரிக்கை
அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் (பச்சரிசி, வெல்லம், கரும்பு போன்றவற்றுடன்) மண்பானை மற்றும் மண் அடுப்புகளையும் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கவேண்டும் என்று மண் பானை தயாரிக்கும் தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோ ரி க்கை விடுத்துள்ளனர்.
இது 4 தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் மண்பாண்டத் தொழிலை ஊக்குவிப்பதுடன், அழிவின் விளிம்பில் உள்ள இந்த தொழிலை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக இருக்கும் என தெரிவித்தனர்.






