விருப்ப மனு என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி பணமோசடியில் ஈடுபடுவதாக சென்னை டிஜிபி, அலுவலகத்தில் மின்னஞ்சல் வாயிலாக டாக்டர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தல்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாமக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோரிடமிருந்து வரும் டிசம்பர் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்திருந்தார். மேலும், தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பதற்கான விண்ணப்பங்களை வாங்குபவர்கள் டிசம்பர் 20-ம் தேதிக்குள் பனையூர் அலுவலகத்தில் தலைமை நிலைய நிர்வாகிகளிடம் விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண் டும் என்றும் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பின்படி, விருப்ப மனு விநியோகத்தை அன்புமணி நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், விருப்பமனு விநியோகம் என்ற பெயரில் அன்புமணி பணமோசடியில் ஈடுபடுவதாக அவரது தந்தையும் பாமக நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் தரப்பில் காவல்துறை டிஜிபிக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக டாக்டகர் ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ இரா.அருள் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாமக பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என்று இ-மெயில் மூலம் டிஜிபிக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார். அதேபோல், தேர்தல் ஆணையத்திடமும் புகார்கொடுக்கப்பட்டுள்ளது. யாரும் மனுவை கொடுத்தும், ரூ.10,000 பணம் கொடுத்தும் ஏமாற வேண்டாம்.
கட்சியின் தலைவர் என்று சொல்லக்கூடாது என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது. ஆனால், தேர்தல் ஆணையத்தை ஏமாற்றியதுபோல், நீதிமன்றத்தையும் ஏமாற்றுகிறார்கள். உண்மையான பாமக என்பது ராமதாஸ் தலைமையில் இருக்கும் பாமகதான். அவர் தான் கூட்டணியை முடிவு செய்வார். வெற்றிக் கூட்டணியை அமைப்பார் என்றார். இந்த நிலையில், டிசம்பர் 17-ம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் கட்சி வளர்ச்சி, அடுத்தக்கட்ட செயல்பாடு, தேர்தல் குறித்து நிர்வாகக்குழு கூட்டம் டிசம்பர் 17-ம் தேதி நடைபெறும் என்றும, இதில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.






