பாமக பெயர், கட்சி சின்னம், கொடியை பயன்படுத்த அன்புமணிக்கு எந்த உரிமையும் இல்லையென ராமதாஸ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு நான்கு மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி, சீட்டு பேரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) உள்கட்சி மோதலால் கட்சியினர் பெரும் குழப்பத்தில் உள்ளனர். அதிகாரப் போட்டி காரணமாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸ்க்கும் ஏற்பட்ட மோதல் கட்சியை இரண்டாக்கியுள்ளது. தற்போது இரண்டு குழுக்களாக பாமக செயல்பட்டு வருகிறது.
இந்த இரண்டு குழுக்களும் போட்டி போட்டு பொதுக்குழுக் கூட்டங்களை நடத்தியது. ஒரு தரப்பினர் ராமதாஸ் தான் பாமக தலைவர் என்று தீர்மானம் கொண்டு வந்தனர். அதற்குப் போட்டியாக அன்புமணி தான் பாமக தலைவர் என இன்னொரு தரப்பு அறிவித்தது. இந்த பிரச்னை நீதிமன்றம், தேர்தல் ஆணையம் வரை சென்றது.
இந்த நிலையில், அன்புமணிக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் நாளிதழ்களில் எச்சரிக்கை அறிவிப்போடு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ” இதன் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் கடைசியாகத் தெரிவிக்கப்படுவது என்னவென்றால், பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் W.P.(C) No.18311/2025 ល. 04.12.2025 வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம், மருத்துவர் அன்புமணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற உரிமையோ, கட்சியின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்தும் உரிமையோ எதுவும் இல்லை என்பது சட்டபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், தேர்தல் ஆணையம் 09.09.2025 மற்றும் 27.11.2025 அன்று பிறப்பித்த உத்தரவுகள் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை என்றும். சட்ட அதிகாரமற்றவை என்றும் உயர்நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது.
எனவே, எந்த அரசியல் கட்சியும், தனிநபரும், அமைப்பும், மருத்துவர் அன்புமணி மற்றும் வேறு எவருடனும் பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல், தேர்தல் அல்லது நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொண்டால், அது சட்டப்படி குற்றமாகும். மேற்கண்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி தொடர்ந்து செயல்படுவோர மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உட்பட சட்டப்படி கடுமையான நடவடிக்கை தவறாமல் மேற்கொள்ளப்படும் என்பதும் இதன் மூலம் கடைசியாக எச்சரிக்கப்படுகிறது” என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





