
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கில் பொன் வசந்த் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவியான இந்திராணியின் மேயர் பதவியைப் பறிக்க திமுக தயங்குவதாக கூறப்படுகிறது. இதனால் இப்பிரச்னையை கையில் எடுக்க எதிர்கட்சிகள் தயாராகி வருகின்றன.
மதுரை மாநகராட்சியின் மேயராக இருப்பவர் இந்திராணி. இவரது கணவர் பொன் வசந்த், அமைச்சர் பழனிவேல் தியாக ராஜனின் தீவிர ஆதரவாளர். இதன் காரணமாகவே இந்திராணி மேயராக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த தினேண் குமார், சொத்துவரி முறைகேடு நடந்ததாக சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்தார். ஆனால், 7 மாதங்களாக வழக்குப்பதிவு செய்யப்படாமல் அந்த புகார் ஆளுங்கட்சியால் முடங்கி வைக்கப்பட்டிருந்தது. இதனால் மதுரை மாநகராட்சிக்கு பல கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக சித்ரா கடந்த 6 மாதங்களுக்கு முன் பொறுப்பேற்றார். இதனையடுத்து சொத்து வரி முறைகேடு புகார் வேகம் எடுத்தது. இந்த புகாரை விசாரிக்க மத்திய குற்றப்பிரிவுக்கு ஆணையர் அனுமதி வழங்கினார். இதனால் சொத்துவரி முறைகேடு புகார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த மோசடியின் பின்னணியில் இருந்த 15 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய உதவி ஆணையர் உள்பட 19 பேரை மாநகராட்சி ஆணையர் சித்ரா பணியிடை நீக்கம் செய்தார். இந்த மோசடி தொடர்பான வழக்கில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட 5 மண்டலத் தலைவர்களும், 2 நிலைக்குழு தலைவர்கள் பதவிகளும் பறிக்கப்பட்டன.
ஆனால், இவ்வளவு பெரிய மோசடிக்கு காரணம் என்று எதிர்கட்சியினரால் குற்றம் சாட்டப்பட்ட மேயர் இந்திராணி, அவரது கணவர் பொன் வசந்த் விசாரணைக்கு அழைக்கப்படாததை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் செய்ததுடன், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. சொத்து வரி மோசடி தொடர்பாக மேயர் இந்திராணி, அவரது கணவர் பொன் வசந்த் ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டும் என்றனர். கடந்த வாரம் கைது செய்யப்பட்ட சொத்துவரி விதிப்புக் குழு தலைவர் விஜயலெட்சுமியின் கணவர் கண்ணன் கொடுத்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதில், மேயரின் கணவர் பொன் வசந்த், மேயர் கணவரின் பி.ஏவாக இருந்த பொன்மணியின் கணவர் ரவி மூலம் சொத்துவரி முறைகேடு செய்ததாக கண்ணன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னையில் பொன் வசந்த் கைது செய்யப்பட்டார். ஆனால், எதிர்கட்சி குற்றச்சாட்டிற்கு ஆளான மேயர் இந்திராணி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது. இந்த நிலையில் ஏற்கெனவே மண்டலத்தலைவர்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,மேயரின் பதவியும் பறிக்கப்பட்டால் அது எதிர்கட்சியினரின் பிரசாரத்திற்கு கருவியாக மாறும் என்பதால் திமுக இந்த விஷயத்தில் வேகம் காட்டாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி பங்கேற்றார். எனவே, அவரது பதவியைப் பறிக்கவோ, ராஜினாமா செய்ய வைக்கவோ திமுக தயங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுரை மாநகராட்சி சொத்துவரி மோசடியில் மேயர் இந்திராணி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டம் நடத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மதுரை அரசியல் வட்டாரம் பெரும் பரபரப்பாக உள்ளது.