
குவைத்தில் கள்ளச்சாராயம் குடித்த ஒரு தமிழர் உட்பட 16 இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு ஆசியாவைச் சேர்ந்த அரபு நாடான குவைத்தில் ஏராளமான இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக கட்டுமானம், மின்சாதனம், போர்வெல், ஓட்டுநர் பணிகளுக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் குவைத்திற்கு செல்கின்றனர். அங்கு நீண்ட காலமாக மதுவிலக்கு உள்ளது. இந்நிலையில், போலி மதுபானங்கள் தயாரித்து விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், குவைத்தின் அஹ்மதி கவர்னரேட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்ற இந்திய தொழிலாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்துஇந்திய தொழிலாளர்கள் குவைத் ஃபர்வானியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தென்காசியைச் சேர்ந்த தமிழர் உள்பட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 21 பேருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. 31 பேருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. 51 பேருக்கு சிறுநீரக டயாசிலிஸ் தேவைப்படுள்ளது.
மெத்தனால் கலந்த பானங்களை உட்கொண்டதன் விளைவாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்திய தூதரகம் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், இறந்தவர்களில் 4 பேர் இந்தியர்கள் என்றும், மொத்தம் 40 இந்தியர்கள் போலி மது அருந்தியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. குடும்ப உறுப்பினர்கள் 655501587 என்ற வழக்கமான அல்லது வாட்ஸ்அப் அழைப்பு மூலம் தொடர்பு கொள்ள தூதரகம் ஒரு உதவி எண்ணையும் அறிவித்துள்ளது.