
குஜராத் மாநிலத்தில் திருமணமான ஆணுடன் தொடர்பு வைத்திருந்த மகளை பாலில் விஷத்தை கொடுத்து கழுத்தை நெரித்து ஆணவக் கொலை செய்த தந்தையை போலீஸார் தேடி வருகின்றனர்.
குஜராத் மாநிலம் பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தராட் காவல் நிலையத்தில் ஹரேஸ் சவுதாரி என்பவர் புகார் அளித்தார். அதில் தன்னுடன் பழகி வந்த 18 மாணவியை அவரது தந்தை செண்டாபாய் படேல் மற்றும் உறவினர்கள் கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக புகாரில் கூறியிருந்தார். அத்துடன் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்திய போது, மாணவி ஜூன்-24-ம் தேதி இறந்துவிட்ட தகவலும், அதை காவல் துறைக்குத் தெரிவிக்காமல் இறுதிச்சடங்கு நடத்தியதாகவும் தெரிய வந்தது. அத்துடன் மாணவியின் தந்தை செண்டாபாய் படேல் தலைமறைவானதும் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியான போலீஸார் விசாரிக்க, விசாரிக்க பல உண்மைகள் வெளிவந்தன.
கடந்த மே மாதம் நீட் தேர்வு எழுதிய அந்த மாணவி, கூடுதல் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று மருத்துவம் படிக்க தயாராகி வந்துள்ளார். இந்த நிலையில், தனது ஆண் நண்பரான ஹரேஸ் சவுதாரியுடன் பழகியதால் அவர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதாக தெரிய வந்தது. ஹரேஸ்க்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. மாணவி தராட் நகரில் படிக்கச் செல்லும் போது ஹரேசுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. அவர்கள் இருவரும் மத்திய பிரதேசம், ராஜஸ்தானுக்கு அடிக்கடி சுற்றி வந்துள்ளனர்.
ராஜஸ்தானில் ஒரு ஓட்டலில் அவர்களை போலீஸார் பார்த்துள்ளனர். இதையடுத்து மாணவியை அவரது உறவினர் சிவராம்பாயிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த நிலையில் மற்றொரு வழக்கில் ஹரேஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 21-ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்த ஹரேஷ், தன் காதலியான மாணவிக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பியுள்ளார். ஆனால்,பதில் வரவில்லை. இதற்கிடையே மாணவி ஆணவக் கொலை செய்யப்பட்டு, இறுதிச் சடங்கு நடந்த செய்தி ஜூன் 25-ம் தேதி அவருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் போலீஸில் புகார் அளித்ததுடன் தனது வழக்கறிஞர் உதவியுடன் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தது தெரிய வந்தது.
மாணவி கொலை செய்யப்படுவதற்கு முன்பு தாண்டியா கிராமத்தில் அவரது மாமா சிவராம்பாய் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்துள்ளார். அங்கு ஜூன் 24-ம் தேதி மாணவிக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு உள்ளது தெரியவந்து இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஹரேஸ் சவுதாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குபபதிவு செய்துள்ள தராட் போலீஸார், மாணவியின் மாமா சிவராம்பாய் மற்றும் நரேன் படேல் ஆகியோரை கைது செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள மாணவியின் தந்தை செண்டாபாய் படேலை வலைவீசி தேடி வருகின்றனர். பெற்ற மகளை தந்தை, உறவினர்களுடன் சேர்ந்து ஆணவக்கொலை செய்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.