
ராஜஸ்தானில் இன்று அதிகாலையில் பிக் அப் வாகனம் மீது லாரி வேகமாக மோதியதில் 7 குழந்தைகள், 4 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் காது ஷியாம் கோயில் உள்ளது. பரிகார கோயிலான இத்தலத்திற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். இதே போல இக்கோயிலுக்கு உத்தரப்பிரதேச மாநிலம், எடாவில் இருந்து 22 பேர் சொந்த வாகனத்தில் வந்திருந்தனர். நேற்று இரவு அவர்கள் கோயிலில் வழிபாடு நடத்தி விட்டு தங்கள் வாகனத்தில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் அவர்களது வாகனம் தௌசாவில் உள்ள மனோஹர்பூர் நெடுஞ்சாலையில் சர்வீஸ் பாதையில் நிறுத்தப்பட்டது. அப்போது எதிரே வந்த லாரி வேகமாக மோதியது. இதில் பிக் அப் வாகனம் முற்றிலும் சிதைந்தது. அந்த வாகனத்தில் இருந்த 7 குழந்தைகள், 4 பெண்கள் உள்பட பத்து பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்புப்படையினர் மற்றும் போலீஸார் விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆனது. விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. குடிபோதையில் இருந்த லாரி ஓட்டுநரால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். மேலும் 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்த விபத்து குறித்து உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். ராஜஸ்தான் அரசு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.