
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (புதன்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்ப சலனம் காரணத்தால் தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 13) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் எனவும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடக்கு மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இப்பகுதிகளில் ஆகஸ்ட் 18-ம் ததி வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. நீலகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில், சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், சில இடங்களில், இடி மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக தென் மாவட்டங்களில், கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், இன்றும், நாளையும், மணிக்கு, 40 முதல், 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே மணிக்கு, 60 கி.மீ, வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.