
சிதம்பரம் அருகே கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் நிதி வழங்குவதற்காக ஊராட்சி செயலாளர் லஞ்சம் கேட்ட ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே மேலதிருக்கழிப்பாலை ஊராட்சி, பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் செயல்படுகிறது. தற்போது, இந்த ஊராட்சியில் தலைவர் இல்லாததால், நிர்வாகப் பொறுப்புகளை ஊராட்சி செயலாளர் கோபாலகிருஷ்ணன் கவனித்து வருகிறார். இந்த ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சுமார் ஏழு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்டடப் பணி முடிந்த பின்பும் அரசு நிதி வழங்கப்படும். ஆனால், நிதி பெறுவதற்கு, ஊராட்சி செயலாளர் கோபாலகிருஷ்ணன் பயனாளிகளிடம் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கேட்டுள்ளார்.
இப்பிரச்னை குறித்து வீரசுந்தரம் என்பவர் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதன் பேரில், பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் விசாரணை செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல மாதங்கள் கடந்தும் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ஊராட்சி செயலாளர் கோபாலகிருஷ்ணன், பயனாளி ஒருவரிடம் ஜி-பே மூலம் லஞ்சம் கேட்ட ஆடியோ பதிவு தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பயனாளிகள் கூறுகையில், இந்த பிரச்னை மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையீடு செய்து லஞ்சம் கேட்ட ஊராட்சி செயலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.