
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தன்னைத் தொடர்புகொள்ளவே இல்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி தந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் 2 நாள் பயணமாக தமிழகம் வந்தார். அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்கக் கோரி, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கடிதம் எழுதியிருந்தார். ஆனாலும், மோடியை சந்திக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர் அதிருப்தி அடைந்தார்.
இதனையடுத்து பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். அத்துடன் அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் நேரில் சந்தித்து பேசினார். இது தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
இதுதொடர்பாக பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “ என்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரை சந்திக்க நானே ஏற்பாடு செய்திருப்பேன்” என்று கூறியிருந்தார்.
இதற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்டார். அதில், “நயினார் நாகேந்திரனை ஆறு முறை கைபேசியில் தொடர்பு கொள்ள நான் முயற்சித்தேன். ஆனால், அவர் எனது அழைப்பை எடுக்கவில்லை. பேச வெண்டுமென்ற தகவலை குறுஞ்செய்தி மூலம் அவருக்கு அனுப்பியிருந்தேன். அதற்கும் எந்தவிதப் பதிலும் அளிக்கவில்லை. இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது” என்று கூறியிருந்தார்.
இது குறித்து ஈரோடு மாவட்டம் பவானியில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், “ஓபிஎஸ் கடிதம் அனுப்பியதாக கூறியது எனக்குத் தெரியவில்லை. தற்போது வரை என்னிடம் வந்து சேரவும் இல்லை. வந்தால் கண்டிப்பாக பொதுவெளியில் வெளியிடுகிறேன். அப்போது உண்மை வெளிவரும்.
தமிழ்நாடு முதலமைச்சரை உடனடியாக நேரடியாக சென்று பார்த்துவிட முடியாது. ஏற்கெனவே அவர்களுக்குள் ஏதேனும் தொடர்பு இருந்தால் மட்டுமே அது சாத்தியம். தனது முடிவுக்கு ஏதேனும் ஒரு காரணத்தை சொல்ல வேண்டுமே என ஓபிஎஸ் இதனைச் சொல்லி வருகிறார்.
என்னைத் தொடர்பு கொண்டதற்கான ஆதாரமாக அவர் சொல்வது மட்டுமே இருக்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்கு முன்னதாக நான் தான் அவரை தொடர்பு கொண்டேன். அவரைப்பற்றி நான் குறைசொல்ல விரும்பவில்லை” என்று பதிலளித்தார்.