தமிழ்நாடு பொறுப்பு டிஜிபியாக உள்ள வெங்கட்ராமன் உடல் நலக்குறைவால் விடுப்பில் உள்ளதால் அபய்குமார் சிங்கிற்கு பொறுப்பு டிஜிபி கூடுதல் பொறுப்பை வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 1991-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான டிஜிபி வெங்கட்ராமன், பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். தற்போது தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். அண்மையில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தனர்.
இந்த நிலையில்,சட்டம், ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக உள்ள வெங்கடராமனுக்கு நேற்று முன்தினம் சுவாசிப்பதில் சிரமம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு சில மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிஜிபியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் ஓய்வு எடுக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து பொறுப்பு டிஜிபியான வெங்கடராமன் வரும் டிசம்பர் .25-ம் தேதி வரை மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார். இதன்காரணமாக டிஜிபி பொறுப்பை கூடுதலாக அபய்குமார் சிங்குக்கு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுமார் 27 ஆண்டுகள் அனுபவமுள்ள அபய்குமார் சிங். தற்போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டிஜிபியாக உள்ளார். அவருக்கு கூடுதலாக சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.


