7வது கேரம் உலக கோப்பையில் 3 தங்கப் பதங்களை வென்றார் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா.

மாலத்தீவில் 7வது கேரம் உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது. இதில், 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றனர். இந்திய மகளிர் அணியில் தமிழகத்தைச் சார்ந்த கீர்த்தனா, காசிமா, மித்ரா ஆகியோர் இடம்பெற்றனர்.

இதில் மகளிர் இரட்டையர் பிரிவில் தமிழ்நாட்டின் காசிமா, மித்ரா ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது. கடந்த உலக கோப்பையில் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற காசிமா, இந்த போட்டித் தொடரில் வெண்கலம் வென்றார்.

3 தங்கம் வென்று வடசென்னை நாயகி
மாலத்தீவில் நடந்த தொடரில் மகளிர் ஒற்றையர், இரட்டையர் அணி, குழு பிரிவு என 3 பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார், வடசென்னையில் உள்ள காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா.

கடந்த சில மாதங்கள் முன் சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா மகளிர் கபடி உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியில் இடம்பெற்று பலரது பாராட்டுகளைப் பெற்றார். தற்போது அதே வடசென்னை பகுதியை சேர்ந்த கீர்த்தனா உலக அளவில் இந்திய நாட்டின் பெருமையையும், தமிழ்நாட்டின் பெருமையையும் நிலைநாட்டியுள்ளார்.
கேரம் போட்டியில் உலக கோப்பை வென்ற கீர்த்தனாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


