மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலத்துடன் செல்ஃபி எடுத்து அதை தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ பிரியா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பாலமுருகன், ஶ்ரீ பிரியா இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. இதனால் கணவரை பிரிந்த ஸ்ரீப்ரியா கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இதற்காக காந்திபுரம் பகுதியில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி ஸ்ரீப்ரியா வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் பாலமுருகனின் உறவினர் இசக்கி என்பவருடன் ஸ்ரீபிரியாவுக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், ஸ்ரீப்ரியாவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பாலமுருகனுக்கு இசக்கி ராஜா அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் நேற்று இரவு கோவை வந்துள்ளார். பின் அதிகாலை நேரத்தில் தனது மனைவி தங்கியிருந்த விடுதிக்கு சென்று இருக்கிறார். அங்கு மனைவியிடம் வாக்குவாதம் செய்து சண்டையில் ஈடுபட்ட பாலமுருகன், தான் கொண்டு வந்த அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ஸ்ரீப்ரியா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மனைவியைக் கொலை செய்துவிட்டு, அதே இடத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்த பாலமுருகன், அதை செல்ஃபி எடுத்துள்ளார். பிறகு அதை ‘துரோகத்தின் சம்பளம் மரணம்’ என்று செல்போன் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார். இதுதொடர்பாக ரத்தினபுரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


