அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இன்று (நவம்பர் 27) இணைகிறார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என்றும், பிரிந்து கிடப்பவர்களை சேர்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அக்கட்சி தலைமைக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தினார். இதன் காரணமாக அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
இந்த நிலையில், தேவர் ஜெயந்தியன்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார். அத்துடன் சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார். இதனால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியால், செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், தனது எம்எல்ஏ பதவியை செங்கோட்டையன் நேற்று (நவம்பர் 26) ராஜினாமா செய்தார். இதன் பின், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் அலுவலகத்துக்கு சென்ற செங்கோட்டையன் அவரை சந்தித்து நீண்டநேரம் பேசினார். இதனையடுத்து தனது ஆதரவாளர்களுடன் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் இன்று தவெகவில் இணைகிறார். இதற்காக ஈரோடு மாவட்டத்தில் இருந்து செங்கோட்டையனின் ஆதவாளர்கள் பேருந்தில் சென்னை வந்துள்ளனர்.
அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமா, அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட முன்னாள் பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியம், கோபி மேற்கு ஒன்றியம் குறிஞ்சிநாதன், முன்னாள் யூனியன் தலைவர்கள் மௌடீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, உள்ளிட்ட பலரும் செங்கோட்டையனுடன் தவெகவில் இன்று ஐக்கியமாகின்றனர்.


