ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ பற்றியதில் 44 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 279 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் உள்ள தை போ மாவட்டத்தில் 32 மாடி அடுக்குமாடி குடியிருப்பு எட்டு வளாகங்களைக் கொண்டது. இதில் கிட்டத்தட்ட 2,000 குடியிருப்புகள் இருந்தன. இதில் சுமார் 4,800 பேர் வசித்து வந்தனர். 1980-ம் ஆண்டு கட்டப்பட்ட ந்த கட்டடம் சமீபத்தில் தான் புதுப்பிக்கப்பட்டது. இந்த கட்டடத்தில் தீடீரென தீப்பற்றிக் கொண்டது.
வெளிப்புற சாரக்கட்டில் தொடங்கிய தீ பின்னர் உள்ளேயும் பரவி அருகில் உள்ள கட்டடங்களுக்கும் பரவியது. தகவல் அறிந்து விரைந்து தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் போராடினர். காற்று வீசியதால் தீ அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்த விபத்தில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதில் 37 வயது தீயணைப்பு படை வீரர் ஆவார். மேலும் 62 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மீட்பு நடவடிக்கையில் 200 தீயணைப்பு வாகனங்களும், 100ஆம்புலன்சுகளும் ஈடுபட்டன. அத்துடன் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்களும், மருத்துவ ஊழியர்களும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தை தொடர்ந்து 279 பேர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் பணியில் போலீஸாரும், தீயணைப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
குடியிருப்பில் இருந்த 900 பேர் குடியிருப்பு வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்து தொடர்பாக கட்டுமான நிறுவனத்தின் பொறுப்பில் உள்ள மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேரும் நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் பொறியியல் ஆலோசகர் என்று மூத்த காவல் கண்காணிப்பாளர் எலைன் சுங் கூறினார். இறந்த தீயணைப்பு வீரருக்கும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.


