காரல் மார்க்ஸ் குறித்தும், கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் விமர்சனம் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற கல்வெட்டுகள் தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

அப்போது விழாவில் பேசிய அவர், “காரல் மார்க்ஸை பின்பற்றுவோர் சுதந்திரத்திற்கு பிறகு நம் நாகரிகம், கலாசாரத்தை அழித்து வருகின்றனர்” என்று குற்றம்சாட்டினார்.
சர்ச்சைக்குரிய கருத்து
“இந்தியாவிற்கு ஏகாதிபத்தியம் தேவை என காரல் மார்க்ஸ் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்; ஆங்கிலேயர்கள் ஆட்சி நன்றாக இருந்ததாக புத்தகங்களில் எழுதியிருந்ததை படித்திருப்போம் என்று தனது கருத்தை விழாவில் பதிவு செய்தார் என்று கூறினார்.

கடும் கண்டனங்கள்!
அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. “ஆளுநர் எந்த புத்தகங்களில் காரல் மார்க்ஸ் பற்றி படித்தார்கள்..? எதை பார்த்து இப்படி பேசுகிறார்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஆளுநர் ரவியின் பேச்சுக்கு, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
“பசுவையும் குரங்கையும் கும்பிடுவது தான் சிறந்த நாகரிகமா?
அதை கம்யூனிஸ்ட்கள் அழித்து விட்டோமா? அத்தகைய மூடத்தனத்திலிருந்து முழுமையாக மக்களை விடுவிக்க முடியவில்லையே என்பதுதான் எங்கள் வருத்தமே!
பிரிட்டிஷ் கொடுங்கோன்மை ஆட்சிக்கு அடிமைச் சேவகம் செய்து கொண்டிருந்த RSS கும்பலின் வாரிசான ஆளுநர் ரவி அவர்கள், காரல் மார்க்ஸ் குறித்து பேச அருகதையற்றவர் அறிவும் அற்றவர்.
மாமேதை காரல் மார்க்ஸ் அவர்கள் இந்தியா குறித்து எழுதியதை அரைகுறையாக படித்துவிட்டு இருட்டடிப்பு செய்து நேற்றைய நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது, என்றும் “ஒழுங்கா படிச்சிட்டு வாங்க சார்!” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சிபிஐ (CPI) கண்டனம்:
மேலும், “பிளவுவாத – வகுப்புவாத சக்திகளுக்கு அரசியல் ஆதாயம் தேடும் வகையில் தரம் தாழ்ந்து பேசி வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு கடும் கண்டனங்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.
“இந்துத்துவா கொள்கைகளை, தாங்கி பிடித்து மேடைகள் தோறும் பேசும், ஆளுநர் ரவி இத்துடன் இதுபோன்ற வேலைகளை நிறுத்திக் கொள்ள வேண்டுமென”, சமூக ஆர்வலர்கள் பலர் கூறுகிறார்கள்.


