அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி எம்எல்ஏ பதவியை இன்று (நவம்பர் 26) ராஜினாமா செய்தார்.
எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் மட்டுமின்றி ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் அமைச்சராக இருந்தவர் செங்கோட்டையன்(77). ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் 8 முறை வெற்றி பெற்ற செங்கோட்டையன், அதிமுகவை ஒருங்கிணைக்கப் போவதாக அறிவித்த காரணத்தால், அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
தேவர் ஜெயந்தியன்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலாவை செங்கோட்டையன் சந்தித்தார். இதன்காரணமாக அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
இதனால் கடும் மனஉளைச்சலில் இருந்த செங்கோட்டையன், நவம்பர் 27-ம் தேதி தவெகவில் இணையப்போவதாக தகவல் பரவியது. இந்த நிலையில், அதிமுக சின்னம் பொறித்த காரில் தலைமைச் செயலகத்திற்கு செங்கோட்டையன் இன்று (நவம்பர் 26) இன்று வந்தார். சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவை சந்தித்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த கடிதத்தை வழங்கினார். 50 ஆண்டு காலமாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த செங்கோட்டையன் தனது பதவியை இன்று ராஜினாமா செய்ததன் மூலமாக அவர் அடுத்தக்கட்ட பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது.
இந்த நிலையில் அவரிடம் தவெகவில் இணைகிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஒருநாள் பொறுங்கள் என்று பதிலளித்துள்ளார். இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் செங்கோட்டையனை அமைச்சர் சேகர்பாபு சந்தித்து பேசினார். இதன் காரணமாக செங்கோட்டையன் திமுகவில் இணைவாரா, தவெகவில் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


