மன்னார்குடியில், ‘தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம்’ சார்பில் நடந்த நிர்வாகக் குழு கூட்டத்தில், விவசாயிகளை காக்கும் வகையிலான 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், ‘தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம்’ சார்பில் திருவாரூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது.
நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள்
இக்கூட்டத்தில், கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படுகிற நெல் ஈரப்பதத்தை 22% நிர்ணயம் செய்திட வேண்டும், இயற்கை விவசாயத்தை ஆர்வப்படுத்த பிரதமர் எடுத்துக் கொள்கிற ஆர்வம் விளம்பர அளவில் இல்லாமல் அது நடைமுறைக்கு வருவதற்கான வழிமுறைகளை செயல்படுத்த வேண்டும்,
மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து குறுவை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
கோடை பருவத்தில் நீர்நிலைகளை தூர்வாருகிற திட்டத்தோடு பாசனம், மற்றும் வடிகால்களில் ஊர்தோறும் உடைந்து கிடக்கிற தடுப்பு மதகுகளை கட்டி தந்து விவசாயத்திற்கான வீரியத்தை அரசு அடையாள படுத்திட வேண்டும் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விவாதித்த நிர்வாகிகள்
கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சங்கத்தின் மாநில தலைவர் கா.இராசபாலன் நிர்வாகிகளின் பல்வேறு விவாத ஆலோசனைகளின் அடிப்படையில் தீர்மானங்களை நிறைவேற்றி பேசினார்.
திருவாரூர் மாவட்டச் செயலாளர் தாஜுதீன் தலமையில் நடைபெற்ற, திருவாரூர் மாவட்ட நிர்வாக குழு கூட்டத்தில், மாவட்ட தலைவர் மாரிமுத்து மகேசன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆரூர் ஜெய்சங்கர், வெள்ளக்குடி விஜேந்திரா, பத்தூர் முத்தையன், பத்தூர் கிளைச்செயலாளர் செந்தில்குமார் மற்றும் சங்க நிர்வாகிகளும் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை கூறி, விவாதித்தனர்.


