வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள்(எஸ்ஐஆர்) தொடர்பாக கேள்வி எழுப்பிய செய்தியாளரை ஒருமையில் பேசி தாக்கப் பாய்ந்த சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எஸ்ஐஆர் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு சீமான், ” அங்கன்வாடியில் வேலை செய்பவர்கள், சத்துணவில் வேலை செய்பவர்கள், கொசுமருந்து அடித்து மருத்துவமனையில் வேலை செய்பவர்களை பிஎல்ஓவா போட்டது யார், திமுக தானே? மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் கொண்டு வரும் போது மம்தா பானர்ஜி அதை எதிர்த்து மக்களை திரட்டி ஊர்வலம் நடத்தினார். ஆனால், தமிழ்நாட்டில் மத்திய அரசு எஸ்ஐஆர் செயல்படுத்த போகிறோம் என்று தெரிவித்தவுடன் திமுக எதிர்ப்பு தெரிவிப்பதைபோல் தெரிவித்துவிட்டு பூத் ஆபீசரை நியமித்துள்ளது” என்றார்.
அதற்கு செய்தியாளர் ஒருவர், ‘எஸ்ஐஆரை எதிர்த்துதான் வழக்குத் தொடரப்பட்டுள்ளதே’ என்று கூறினார். இதனால் டென்சனான சீமான், ” உனக்கு என்ன தம்பி பிரச்னை? ஏய்… அரசு சொல்வதை தேர்தல் ஆணையம் கேட்க வேண்டுமா, தேர்தல் ஆணையம் சொல்லுறத அரசு கேட்கணுமா? உனக்கு என்ன பிரச்சனை, தொடக்கத்தில் இருந்தே உனக்கு ஏதோ பிரச்சனை இருக்கு.. காமெடி பண்ணிட்டு அலையாதீங்க.. நீதிமன்றத்தில் இதை எதிர்க்கிறேன் என்று வழக்கு போட்டாயா?
உன்னை இன்றைக்கு அல்ல, ரொம்ப நாளாக பார்க்கிறேன். பைத்தியமாட்டே என்று நினைக்கிறேன். நீ மரியாதையாக கேள்வி கேளுடா.. டேய் நீ முதல்ல கேள்வி கேட்க கத்துக்கிட்டு வாடா. போடா, ஏய், ஒரு மைக்கை தூக்கிட்டு, கேமராவையும் தூக்கிட்டு வந்தா பெரிய வெங்காயமாடா நீ.. போடா அந்தப்பக்கம்” என்றார். அத்துடன் சீமான் ஆத்திரமாக எழுந்து செய்தியாளரை அடிக்கப் பாய்ந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செய்தியாளருக்கும், சீமானுக்கும் வாக்குவாதம் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து வெளிய வந்த அந்த செய்தியாளரை சூழ்ந்து கொண்ட நாம் தமிழர் கட்சியினர் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. சீமானின் அநாகரீமான பேச்சுக்கு தென்னிந்திய பத்திரிகையாளர் சங்கம் கண்டன் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வில்லியனூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


